'யுனிகோட்' எந்த இயங்குதளம் ஆயினும், எந்த நிரல் ஆயினும், எந்த மொழி ஆயினும் ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்துவமான எண் ஒன்றை வழங்குகிறது.
அடிப்படையில் கணினிகள் எண்களுடன்தான் தொழிற்படுகின்றன. அவை எழுத்துக்களையும் பிற வரியுருக்களையும் எண்வடிவிலேயே சேமிக்கின்றன. 'யுனிகோட்' கண்டறியப்படு முன்னர் இவ்வாறு எழுத்துக்களுக்கு எண்களை வழங்க நூற்றுக்கணக்கான குறியீட்டு முறைகள் இருந்தன. இவற்றில் எந்தவொரு முறையிலும் போதுமான அளவு எழுத்துக்கள் இருக்கவில்லை: உதாரணமாக, ஐரோப்பிய ஒருங்கியத்திலுள்ள மொழிகளை உள்ளடக்கவே பல்வேறு குறியீட்டு முறைகள் தேவைப்பட்டன. ஆங்கில மொழியில் கூட எந்தவொரு குறியீட்டு முறையினாலும் பொதுவாகப் புழங்கும் எல்லா எழுத்துக்களையும், தரிப்புக் குறிகளையும், மற்றும் தொழிநுட்பக் குறிகளையும் உள்ளடக்க முடியவில்லை.
மேலும் இக்குறியீட்டு முறைகள் ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன. அதாவது, இரு குறியீட்டு முறைகள், இரு வேறு எழுத்துக்களுக்கு ஒரே எண்ணையோ, அல்லது ஒரே எழுத்துக்கு இரு வேறு எண்களையோ புழங்கலாம். இதனால் எந்தவொரு கணினியும் (குறிப்பாகப் பரிமாறிகள்) பல்வேறு குறியீட்டு முறைகளை ஆதரிக்க வேண்டியுள்ளது; இந்நிலையிலும் வெவ்வேறு குறியீட்டு முறைகளுக்கு இடையிலோ அல்லது இயங்குதளங்களுக்கு இடையிலோ தரவுகள் பரிமாறப்படும் போது, அத் தரவுகள் பழுதுபடச் சாத்தியமுள்ளது.